உலகம்

பாகிஸ்தானின் 18ஆவது பிரதமராக ஷாகித் அப்பாஸி தேர்வு

பாகிஸ்தானின் 18ஆவது பிரதமராக ஷாகித் அப்பாஸி தேர்வு

webteam

பாகிஸ்தானின் 18ஆவது பிரதமராக ஷாகித் அப்பாஸியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்வு செய்தது.
 
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர், ஷாபாஸ் ஷெரீப் பிரதமராக ஆளும் முஸ்லீம் லீக் கட்சியால் முன்னிறுத்தப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால பிரதமராக நவாஸ் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறையைக் கவனித்த ஷாகித் அப்பாஸி நிறுத்தப்பட்டார். 

அவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. எதிர்கட்சிகள் சார்பில் 6 பேர் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 342 வாக்குகளில் ஷாகித் அப்பாஸி 221 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்த அறிவிப்பை பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சித்திக் வெளியிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எதிர்கட்சித் தலைவர் இம்ரான்கான் தரப்பில் நிறுத்தப்பட்ட சையது நவீத் உமர் 47 வாக்குகளும், அவாமி முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் ரஷீத் 33 வாக்குகளும் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவாஸின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை 45 நாட்கள் பாகிஸ்தான் பிரதமராக ஷாகித் அப்பாஸி பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.