உலகம்

தீவிபத்தில் சிக்கிய சரக்குக் கப்பல் : கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்தால் பேரழிவு..!

தீவிபத்தில் சிக்கிய சரக்குக் கப்பல் : கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்தால் பேரழிவு..!

webteam

குவைத்திலிருந்து இந்தியா வந்த சரக்கு கப்பல் தீவிபத்தில் சிக்கியுள்ள நிலையில், அதிலிருக்கும் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்தால் கடலில் பேரழிவு ஏற்படும் என அச்சம் எழுந்துள்ளது.

குவைத்திலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஏற்றிக்கொண்டு இந்தியா வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல் இலங்கை கிழக்கு கடற்கரை பகுதியில் வரும்போது விபத்தில் சிக்கியது. கப்பலின் இன்ஜின் பகுதியில் முதலில் தீ பற்றியதாகவும், பின்னர் மற்ற பகுதிகளுக்கு தீ பரவியதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருக்கிறது. கப்பலில் ஏற்பட்டிருக்கும் தீயை அணைக்க இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த கடற்கடை படையினர் போராடி வருகிறது.

இந்த தீவிபத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 22 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கப்பலில் பற்றிய தீ இன்னும் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் இருக்கும் டேங்கருக்கு பரவவில்லை எனப்படுகிறது. அவ்வாறு பரவினால் கடலில் பேரழிவு ஏற்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

ஏனென்றால் அந்தக் கப்பலில் 2.70 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயும், 1700 மெட்ரிக் டன் டீசலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை வெடித்து கடலில் கலக்கும்போது, அது கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் எனப்படுகிறது. அதற்குள் தீயை அணைக்க மூன்று நாடுகளின் கடற்படை தரப்பிலிருந்து தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு கச்சா எண்ணெய் 70,000 மெட்ரிக் வரை கலந்தாலும், மூன்று நாடுகளின் கடற்கரைக்கும் உடனே எந்த பாதிப்பும் இருக்காது என மத்திய புவி அறிவியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இன்காய்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.