உலகம்

படுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா?

படுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா?

webteam

சவுதி தூதரகத்துக்குள் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகியின் உடல் அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 

சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’பத்திரிகையில் எழுதி வந்தவர், ஜமால் கஷோகி (59). தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்கா‌க ஜமால் கஷோகி கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார்.அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றார். சவுதி தூதரகத்துக்கு சென்ற சவுதி பத்திரிகையாளர் கஷோகி அதற்குப் பின் திரும்பி வரவில்லை. சுமார் 18 நாட்களுக்குப் பிறகே, அவர் தூதரகத்துக்குள் கொல்லப்பட்டதாக சவுதி தெரிவித்தது.

கஷோகியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஐந்து சூட்கேஸ்களில் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கிணற்றில் அவரது உடல் மீட்கப்பட்ட விவரமும் தெரியவந்தது. 

இந்தச் சூழலில், கஷோகி மாயமாகி 9 நாட்களுக்குப் பின் 11 பேர் கொண்ட வேதியியல் நிபுணர்களை விசாரணை என்ற பெயரில் சவுதி அனுப்பி இருந்தது. அந்தக் குழுவில், வேதியியல் நிபுணர் அகமது அப்துலாஜிஸ் அல் ஜனோபியும், நச்சுயியல் துறை நிபுணர் காலேத் அல் ஜஷ்ராவும் உடனிருந்ததாகவும், அவர்கள் கஷோகியின் உடல் அமிலத்தில் கரைக்கப்பட்ட ஆதாரங்களை மூடி மறைத்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. எனினும் அவரது உடல் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை சவுதி அரசு இதுவரை வெளியிடவில்லை. 

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டில் இருந்து கஷோகியின் உடல் பாகங்கள் ஒரு கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அப்போது கிணற்றுக்குள் இருந்த இரும்பு குழாய்களில் வேதியியல் பொருட்கள் மற்றும் அமிலங்கள் படிந்திருந்ததாகவும், அந்தத் தடயங்களை எடுத்து வந்து சோதனை செய்ததில், அவை மனித உடல்களை கரைக்கும் தன்மை கொண்ட அமிலம் என தெரிய வந்திருப்பதாகவும் துருக்கி அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

துருக்கி அதிபரின் நெருங்கிய உதவியாளரான யாசின் அக்தேவும் கடந்த 2 ஆம் தேதி கஷோகியின் உடல் அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியிருந்தார். துண்டு, துண்டாக வெட்டப்பட்ட கஷோகியின் உடலை எளிதில் அழிக்கும் வகையில், இந்த நடவடிக்கையில் சவுதி அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது விசாரணை முடிவுகள் வெளியாகி இருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வலுவான ஆதாரங்களை சேகரிப்பதற்கு சவுதி தூதரக அதிகாரியின் வீட்டில் முழுமையாக சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என துருக்கி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.