உலகம்

சிகாகோவில் உருவான சூறாவளி - சமூக ஊடகங்களில் புயலை கிளப்பிய செயற்கைக்கோள் வீடியோ

சிகாகோவில் உருவான சூறாவளி - சமூக ஊடகங்களில் புயலை கிளப்பிய செயற்கைக்கோள் வீடியோ

Sinekadhara

அமெரிக்காவில் “tornadic supercell” உருவானதை செயற்கைக்கோள் ஒன்று படம்பிடித்திருக்கிறது. இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் சிகாகோ மாகாணத்தில் சக்திவாய்ந்த புயல்கள், சூறாவளி தாக்கியதோடு ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மரங்களும் பல கீழே விழுந்தன. மேலும் மின் இணைப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த மோசமான வானிலையை செயற்கைக்கோள் படம்பிடித்திருக்கிறது. அதை வளிமண்டலத்தில் ஆராய்ச்சிக்கான கூட்டுறவு நிறுவனம் (CIRA) சமூக ஊடகங்களில் பதிவிட்டு புயலை கிளப்பியிருக்கிறது. "இன்று மாலை சிகாகோ வழியாக பயணித்த கடுமையான புயலின் ஈர்க்கக்கூடிய செயற்கைக்கோள் காட்சி’’ என்று மேற்கோளிட்டு பதிவிட்டிருக்கிறது.

சூப்பர்செல் என்பது மீசோசைக்ளோன் உடனான இடியுடன்கூடிய மழை என்பதைக் குறிக்கிறது. Mesocyclone என்பது ஆழமான, சுழன்றுகொண்டே இருக்கும் மேலோட்டம். இதனை சுழலும் இடியுடன் கூடிய மழை என்றும் குறிப்பிடலாம். இவை பெரும்பாலும் மற்ற இடியுடன் கூடிய மழையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, 32 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றுவட்டார வானிலையில் ஆதிக்கம் செலுத்தும்.

CIRA வெளியிட்டுள்ள இந்த சிறிய டைம்லேப்ஸ் செயற்கைக்கோள் காட்சி, இந்த வார தொடக்கத்தில் சிகாகோ பகுதியில் வீசிய சக்திவாய்ந்த புயலின் அளவை துல்லியமாக காட்டுகிறது. இந்த சூப்பர்செல் சிகாகோ பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டதாக US தேசிய வானிலை சேவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. இருப்பினும் காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் தாக்கம் குறித்து இந்த வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிகாகோ புயல் தாக்கம் குறித்து NBC வெளியிட்ட செய்தியில், இந்த சூறாவளி புயலால் கிட்டத்தட்ட 40,000 வீடுகளில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், மரங்கள் சாய்ந்ததாகவும், கிட்டத்தட்ட 18 குடும்பங்கள் இடம்மாற்றப்பட்டதாகவும், காயங்கள் ஏற்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் இந்த கடுமையான சூறாவளி புயல் வெளியேறிய பிறகு அதீத வெப்பம் மற்றும் ஆபத்தான ஈரப்பதம் சூழ்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.