உலகம்

கன்னியாஸ்திரியால் எழுதப்பட்ட சாத்தானின் கடிதம்: 300 ஆண்டுகளுக்கு பின் மொழிபெயர்ப்பு

கன்னியாஸ்திரியால் எழுதப்பட்ட சாத்தானின் கடிதம்: 300 ஆண்டுகளுக்கு பின் மொழிபெயர்ப்பு

webteam

சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய குறியீடுகள் 300 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1676 ஆம் ஆண்டு சிசிலியில் உள்ள ஒரு பழமையான கன்னியாஸ்திரி மடத்தில் புரியாத குறியீட்டு எழுத்துக்கள் கொண்ட கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை எழுதிய மரியா க்ரோசிஃபிஸா டெல்லா என்ற கன்னியாஸ்திரி, தனது 15வது வயது முதல் அந்த மடத்தில் இருந்துள்ளார். இவர் தன்னை சாத்தான் ஆட்கொண்டுள்ளதாகவும், சாத்தான் தான் நினைத்ததை தன் மூலம் சாதிக்க விரும்புவதாகவும், பேய்களுக்கு சேவை செய்ய சாத்தான் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியதாக மரியா குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொழிபெயர்க்கப்பட்ட அந்த குறியீட்டில், கடவுளும், இயேசுவும் மிக பாரமாக உள்ளதாகவும், மனிதன் கடவுளை உருவாக்கினான், ஆனால் அது யாருக்காகவும் செயல்படவில்லை. மேலும் பூமிக்கும் பாதாள உலகத்திற்கும் இடையே உள்ள ஸ்டைக்ஸ் என்ற நதி குறித்தும் கூறப்பட்டுள்ளது. இன்னும் குறியீடு முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று இதை மொழிபெயர்த்த இத்தாலி நாட்டின் கட்டானியா நகரில் உள்ள லூடம் அறிவியில் மையத்தின் ஆய்வாளர்கள் கூறினர்.

இந்தக் குறியீடுகளை மொழிபெயர்க்க லத்தின், பழைய கிரேக்கம் மொழி மற்றும் அரபி மொழியில் செயல்படும் ஒரு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறினர். குறியீடுகளை எழுதிய கன்னியாஸ்திரி குறித்து டேனியல் ஏபெட் என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் கூறும்போது, அந்த கன்னியாஸ்திரியை நிஜமாகவே சாத்தான் ஆட்கொண்டதா என்பது தெரியவில்லை. கன்னியாஸ்திரி பல்வேறு பழமையான மொழிகளில் அதிக அறிவு இருந்திருக்கலாம், அதனாலேயே இதுபோன்ற குறியீடுகளை அவர் எழுதியிருக்கலாம். அவருக்கு மனச்சிதைவு நோய் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவரின் மன நோயே இதுபோன்ற கற்பனைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறினார்.