இந்தியா-பாகிஸ்தான் இடையே சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் நாளை தொடங்கவுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே வாரம் இருமுறை சம்ஜவுதா எக்ஸ்பிரசஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை பால்கோட்டிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் விமான சேவைகளை ரத்து செய்தது. அதனால் இந்தியாவும் சம்ஜவுதா ரயில் சேவையை கடந்த 28ஆம் தேதி முதல் நிறுத்திருந்தது.
இந்நிலையில், தற்போது சம்ஜவுதா எக்ஸ்பிரசஸ் ரயில் சேவை மறுபடியும் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி பிடிஐ நிறுவனத்திடம், “சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து நாளை புறப்படும். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து திங்கட்கிழமை இந்த ரயில் புறப்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று பாகிஸ்தானிடம் இருந்த இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். இதனால் இருநாடுகள் இடையே நிலவிய பதற்றமான சூழல் சற்று குறைந்துள்ளது. இதனால் மீண்டும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.