உலகம்

விண்வெளி நிலையத்தை கூட எங்களால் விழச்செய்ய முடியும் - எச்சரித்த ரஷ்யா

விண்வெளி நிலையத்தை கூட எங்களால் விழச்செய்ய முடியும் - எச்சரித்த ரஷ்யா

நிவேதா ஜெகராஜா

ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகளை எச்சரிக்கும் விதமாக, `500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை விழச் செய்யும் அளவுக்கான ஆற்றல்சக்தி எங்களுக்கு உள்ளது’ என அந்நாட்டை சேர்ந்த விண்வெளி முகமை எச்சரித்துள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கும் நாடுகளை எச்சரிக்கும் வகையில், `சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விழச்செய்ய ரஷ்யாவால் இயலும்’ என ரஷ்ய விண்வெளி ஏஜென்சியான ரஸ்காஸ்மோசின் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் ட்விட்டரில் இதுதொடர்பான தொடர் பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில் `500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் ரஷ்யாவின் தலை மேல் இல்லை’ என்று கூறியுள்ள டிமிட்ரி, `அதன் மீதான கட்டுப்பாட்டை (பொறுப்பை) ரஷ்யா கைவிட்டால், அது அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது விழக்கூடும்’ என்று பதிவிட்டுள்ளார். இந்தியா அல்லது சீனா மீதும் அது விழ வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ள அவர், `இதுபோன்ற மிரட்டலை ரஷ்யா விடுக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதற்கான ஆபத்து உங்களுடையது, அதை எதிர்கொள்ளத் தயாரா?’ என்றும் அடுத்தடுத்த ட்வீட்களை டிமிட்ரி வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளால் கட்டமைக்கப்பட்ட 500 டன் எடை கொண்ட விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 விஞ்ஞானிகள் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.