ரஷ்ய விமானம் ஒன்று தடையை மீறி தங்கள் நாட்டின் வான்வெளி வழியாக பறந்து சென்றுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்திருப்பதால் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்திருக்கின்றன. அந்த வகையில் கனடா நாடும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேலும் தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்தவும் தடை விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வரும் என்றும், உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைப்போம் என்றும் கனடா அறிவித்துள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, தடையை மீறி தங்கள் நாட்டின் வான்வெளி வழியாக பறந்து சென்றுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிமீறலைத் தொடர்ந்து ஏரோஃப்ளோட் மற்றும் கனடாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவை வழங்குநரான நேவ் கனடா ஆகியவற்றின் நடத்தை குறித்து மறுஆய்வு செய்யப்போவதாக கனடா போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இனியும் தடையை மீறி ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறந்தால் பிற நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம் என்று கனடா அரசு எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிற்கும் கனடாவிற்கும் இடையில் நேரடி விமான சேவை இல்லை என்றாலும், நாள்தோறும் பல ரஷ்ய விமானங்கள் கனடா வான்வெளி வழியாக மற்ற நாடுகளுக்கு பயணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முடிவுக்கு வருமா போர்? - பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு