உலகம்

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகிறதா ரஷ்யா? திடீர் போர் பயிற்சியால் பதற்றம்

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகிறதா ரஷ்யா? திடீர் போர் பயிற்சியால் பதற்றம்

ஜா. ஜாக்சன் சிங்

ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அணு ஆயுத ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பால்டிக் கடற்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வந்தனர். உக்ரைனுக்கு ஆதரவான ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியா இடையே இந்தக் கடற்பகுதி இருப்பதால், ரஷ்யாவின் இந்தப் படை குவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லிதுவேனியாவில் இருந்துதான் உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் செல்வதால் அந்நாட்டை ரஷ்யா தாக்கக்கூடும் என தகவல் பரவியது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. எனினும், ரஷ்ய ராணுவம் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், நேற்று முதலாக பால்டிக் கடற்பகுதியில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிரிகளின் ராணுவ நிலைகள், பீரங்கிகள், தளவாடங்கள் ஆகியவற்றை போல வடிவமைக்கப்பட்ட மாதிரிகள் மீது ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அணு ஆயுதங்கள் இல்லாமல் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்தப் போர் பயிற்சியால் உக்ரைன் மீது விரைவில் அணு ஆயுத ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என மேற்கத்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும், இந்த செய்திகளுக்கு ரஷ்யா இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர் இனப்படுகொலை செய்யப்படுவதாக கூறி அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. ஆனால், தாங்கள் நேட்டோ கூட்டணியில் இணைவதை தடுக்கும் விதமாகவே இந்த போரை ரஷ்யா நடத்தி வருவதாக உக்ரைன் கூறியுள்ளது. சுமார் 70 நாட்களாக நடைபெற்று வரும் போரால் உக்ரைனின் பல நகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவத் தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இருதரப்புக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.