2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இதுகாறும் உலகம் முழுவதும் பீடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி பயன்பாடு என பல விதமான நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கு பாதியாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
இருப்பினும் உருமாருதல் பெற்ற பல வகையான கொரோனா தொற்றுகள் இன்றளவும் பரவிக் கொண்டே இருக்கின்றன. அதனால் உயிரிழப்புகள் ஏதும் பெரிதளவில் பதிவாகாதது சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதே சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக முடங்கிக் கிடந்த உலகப் பொருளாதாரம் தற்போது தலைதூக்க தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், ரஷ்ய நாட்டில் இருக்கும் வெளவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வகை வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ரஷ்ய வெளவால்களில் கோவிட்-19 போன்ற வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Khosta வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த வகை தொற்று SARS-CoV-2 போன்ற கொரோனா வைரஸ்களின் துணை வகையைச் சேர்ந்தது என்றும் இது மனித உயிரணுக்களை பாதிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனாவை போல எதிர்வரும் காலத்தில் பற்பல வைரஸ் பாதிப்புகள் நேரலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த ரஷ்ய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.
கொரோனா போலவே சர்பெகோவைரஸ் வகையை சேர்ந்த ரஷ்ய வைரஸ் தொற்றும் சுவாச பாதையை பாதிக்கச் செய்யக்கூடியதாகவும், இதுவும் தொடர்ச்சியாக உருமாறிக் கொண்டே இருக்கக் கூடியதாகவும் அறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரஷ்யா வெளவால்களில் இருந்து பரவும் இந்த கோஸ்தா வைரஸின் முதல் வகை மனிதர்களை அவ்வளவாக அச்சுறுத்தவில்லை என 2020ல் வாஷிங்டன் பல்கலைக்கழக் ஆராய்ச்சியாளர்கள் முதலில் கண்டுபிடித்திருந்தார்கள்.
ஆனால், கோஸ்தா 2 என வகை கட்டாயம் மனிதர்களிடத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்றும், மனிதர்களின் செல்களை பாதித்து பேராபத்தை ஏற்படுத்தச் செய்யலாம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக, கொரோனா தொற்றில் இருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இந்த கோஸ்தா வகை வைரஸுக்கு ஒத்துழைக்காது என்றும், இது இந்த அளவுக்கு பெரிய வித்தியாசமானதாக மாறுபட்டதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஏனெனில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆண்டிபாடிகளை சோதித்து பார்த்த போது அவை ரஷ்ய வகை வைரஸுக்கு எதிராக போராடவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்ததால் கோஸ்தா 2 வைரஸ் மனிதர்களிடத்தில் பரவினால் மீண்டுமொரு பேரபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.