நேரலை செய்து கொண்டிருந்த நிருபரை வெளியே தள்ளிய பாதுகாப்பாளர்
பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க விழாவில் சம்பவம்
பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியை நேரலை செய்து கொண்டிருந்த நெதர்லாந்து நிருபரை அங்கிருந்த பாதுகாப்பாளர் ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிய சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2022-ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, ஒலிம்பிக் தொடக்க விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதற்காக அங்குள்ள தேசிய விளையாட்டரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிகளை நெதர்லாந்தை சேர்ந்த தனியார் செய்தித் தொலைக்காட்சி நிருபர் நேரலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சீன அரசின் பாதுகாப்பாளர் ஒருவர், அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றார். ஆனால், நிருபர் தொடர்ந்து நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த நிருபரை பாதுகாப்பாளர் வேகமாக தள்ளிவிட்டார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாதுகாப்பாளரின் இந்த அடாவடியான செயலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்தக் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நிருபர் ஜோர்ட் டென் தாஸ் தற்போது நலமாக இருக்கிறார். பாதுகாப்பாளர் வெளியேற்றிய சிறிது நேரத்தில் வேறு பகுதியில் இருந்து அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவிட்டார். சீனாவில் உள்ள நிருபர்களின் நிலைமை இதுதான்" எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை சேகரிக்க செல்லும் வெளிநாட்டு நிருபர்களிடம் அந்நாட்டு போலீஸாரும், அரசு பாதுகாப்பாளர்களும் கடுமையாகவும், அராஜகப் போக்குடனும் நடந்து கொள்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதன் காரணமாக, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெய்ஜிக் ஒலிம்பிக்கை தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=2yu-qfwS-m8