உலகம்

"எல்லாமே எனது தந்தைதான்"- உருகிய பில்கேட்ஸ்

"எல்லாமே எனது தந்தைதான்"- உருகிய பில்கேட்ஸ்

jagadeesh

உலகம் போற்றும் தொழில்நுட்ப அறிஞரான பில்கேட்ஸின் தந்தை பில்கேட்ஸ் சீனியர் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பில்கேட்ஸ் உருக்கமான குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தொழில்நுட்பத்தால் உலகை வியக்க வைக்கும் திறன், பல லட்சம் கோடி ரூபாய் சொத்து, ஏழை மக்களுக்கு உதவும் நல்ல முயற்சிகள், தமக்கு வாய்த்த இவை அனைத்துக்கும் காரணம் தனது தந்தைதான் என்கிறார் பில்கேட்ஸ். அஞ்சி முடங்கியிருந்த தருணங்களில் தனது தந்தை மனஉறுதியைத் தந்தார் என்றும் நினைவுகூர்கிறார். பில்கேட்ஸின் தந்தையான வில்லியம் ஹென்றி கேட்ஸ் மிகவும் புகழ்பெற்ற வழக்கறிஞர். அமெரிக்காவின் பல மாநிலங்களில் பார் கவுன்சில்களின் தலைவராகவும் இருந்திருக்கிறார். 94-வயதான அவர் கடந்த 14-ஆம் தேதி மரணமடைந்தார். இது தாங்கிக் கொள்ள இயலாத துயரம் எனக் குறிப்பிட்டு தனது வலைத்தள பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார் பில்கேட்ஸ்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டு வெளியேறுவது என்ற புரட்சிகரமான முடிவை எடுத்தது பற்றியும் பில்கேட்ஸ் தனது பதிவில் நினைவுகூர்ந்திருக்கிறார். தோற்றுப்போனால் தந்தையும் தாயும் தம்பக்கம் நிற்பார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அப்படியொரு அபாயகரமான முடிவை எடுக்கத் துணிந்ததாகவும் பில்கேட்ஸ் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.சொன்னதைச் செய் என்று மிரட்டும் வகையிலான ஆதிக்க எண்ணத்துடன் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை; அதே நேரத்தில் நீச்சல், கால்பந்து போன்ற முடியாது என நினைத்திருந்த பல துறைகளிலும் தம்மை உந்தித் தள்ளியவர் தனது தந்தை என்கிறார் பில்கேட்ஸ்.

உலகம் முழுவதுதும் தொண்டு செய்துவரும் கேட்ஸ் அறக்கட்டளை உருவானதிலும், அதை வடிவமைத்து இப்போதிருக்கும் நிலைக்குக் கொண்டுவந்ததிலும் தந்தையின் பங்களிப்பு அளப்பரியது. தொண்டு என்ற பெயரில் போலிப் பாசாங்குடன் பேசுவதையும் செயல்படுவதையும் அவர் விரும்பியதில்லை என்கிறார் பில்கேட்ஸ். கேட்ஸ் அறக்கட்டளையில் தந்தை போல் அல்லாமல் நண்பரைப் போலப் பணியாற்றி வந்தார்; அப்போதுதான் அது எவ்வளவு பரவசமானது என்பதை உணர முடிந்தது என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும், குழந்தைகள் மீது எப்படி அன்பு செலுத்தி வழிகாட்ட வேண்டும், மனிதர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதையெல்லாம் தமது தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார் பில்கேட்ஸ்.

குடும்ப அமைப்புகள் வழக்கொழிந்து வரும் சூழலில், குழந்தைகள் வளர்ப்பில் தடுமாறி வரும் பலருக்கு பில்கேட்ஸின் பதிவு புதிய வழியைத் காட்டக்கூடும்.