மாடல்கள் படங்களை தொழில்நுட்ப ரீதியில் மாற்றம் செய்து போலி விளம்பரங்களை உருவாக்குவதைத் தடுக்க பிரான்ஸ் அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ள விஷயம் உலகம் முழுக்க புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மாடல்களை வைத்து எடுக்கப்படும் விளம்பர புகைப்படங்களை மேலும் மெருகேற்றிக் காட்டுவதற்காக கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். படங்களை மாற்றம் செய்வதற்காகவே ரீ டச்சிங் என்ற தொழில்நுட்பம் தற்சமயம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதை பயன்படுத்தி பலர் நம்பக தன்மையற்ற தவறான விளம்பரங்களை வெளியிட்டு மோசடி செய்து வருகிறார்கள்.
உதாரணமாக உடற்பருமனாக உள்ள ஒருவரை புகைப்படம் எடுத்து ரீ டச்சிங் தொழில் நுட்பதை பயன்படுத்தி மாற்றம் செய்து பத்தே நாட்களில் இவரது உடல் எடை இந்தளவுக்கு குறைந்துவிட்டது என போலியாக விளம்பரப்படுத்துகிறனர். அதே போல பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. இந்தப் போலியான விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் உண்மை என நம்பி ஏமாந்துவிடுகிறார்கள்.
இதை தடுக்க ஃபிரான்ஸ் நாட்டில் வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் எந்தப் புகைப்படத்திலும் அதில் உள்ள மாடல்களை ஒல்லியாகக் காட்டும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றங்களைச் செய்திருந்தால் 'இந்தப் படம் எடிட் செய்யப்பட்டிருக்கிறது' என சிகரெட் பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கைகளைப் போல குறிப்பிட வேண்டும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விதியை மீறுகிறவர்கள் மீது 37,500 யூரோக்கள் அல்லது அந்த விளம்பரத்தை எடுப்பதற்கு செலவிடப்பட்ட தொகையில் 30% அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ரீ டச்சிங் மோசடியை சமாளிக்க பிரான்ஸ் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை போன்ற விதிமுறைகளை இஸ்ரேல் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.