உலகம்

ராவணன் எங்களின் பேரரசன், உலகின் முதல் விமானி – உரிமை கொண்டாடும் இலங்கை அரசு

ராவணன் எங்களின் பேரரசன், உலகின் முதல் விமானி – உரிமை கொண்டாடும் இலங்கை அரசு

Veeramani

இந்தியர்களால் உரிமைக் கொண்டாடப்படும் ராமன், தங்கள் ஊரில்தான் பிறந்தார் என்று நேபாளம் உரிமைக் கொண்டாட ஆரம்பித்துள்ளது. அதுபோல ராவணனுக்கு, தீவிரமாக உரிமைகொண்டாட ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு.

ராவணன்தான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானத்தை இயக்கிய உலகின் முதல் விமானி, எங்களின் பெருமைக்குரிய பேரரசன் என்று கூறி இதை நிரூபிக்க மக்களிடம் போதுமான ஆதாரம் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம் என இலங்கை விமானத்துறை சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக விமானம் மூலம் ராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படுகிறது.  அதனால் ராவணன்தான் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தினார், அவர்தான் உலகின் முதல் விமானி என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்‘‘மன்னர் ராவணன் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் அல்லது புத்தகம் இருந்தால் அதனை அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ராவணனின் பெருமை மற்றும் நம் நாட்டின் விமான ஆதிக்கத்தின் பாரம்பரியம் ஆகியவை குறித்து அரசு ஆழமான ஆராய்ச்சியை நடத்துகிறது. உங்களின் ஆவணங்கள் அதற்கு உதவிக்கரமாக இருக்கும்’’ என்றும் தெரிவித்துள்ளது.

 விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே அளித்துள்ள பேட்டியில் ‘‘மன்னர் ராவணன் ஒரு மேதை. ஆகாயத்தில் பறந்த முதல் நபர் அவர்தான். அவர் ஒரு விமானி. இது ஒரு புராணக்கதை அல்ல. அது உண்மை. இதுகுறித்து விளக்கமான ஆராய்ச்சி தேவை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை நாங்கள் நிரூபிப்போம்’’ என்றார்.  கடந்த ஆண்டு காட்டுநாயகாவில் விமானப்போக்குவரத்து துறை சார்பாக நடத்தப்பட்ட மிகப்பெரிய கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள், புவியியல், தொல்லியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் என பலரும் கலந்துகொண்டனர். அப்போது ராவணன் தான் உலகின் முதல் விமானி என்ற முடிவுக்கு வந்தோம் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை தனது ஏவுகணைக்கும் ராவணா என்று பெயர் சூட்டியுள்ளது