முதன்முதலாக தென் அட்லாண்டிக் கடல்பகுதியில் மஞ்சள்நிற பென்குயின் ஒன்று கண்டறியப்பட்டது பறவை ஆர்வலர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
2019ஆம் ஆண்டு பென்குயின்கள் நிறைந்த தெற்கு ஜார்ஜியா தீவுப்பகுதிகளில் 2 மாத புகைப்படச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் யுவெஸ் ஆடம் மற்றும் அவரது குழுவினர். அங்கு அவர்கள் 1,20,000 கிங் பென்குயின்கள் குழுமியிருந்ததைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியதாக ஆடம் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். ஆடம் இதுபற்றி கூறுகையில், ‘’என் வாழ்க்கையில் மஞ்சள்நிற பென்குயினை அதற்குமுன்பு பார்த்ததே இல்லை. 1 லட்சத்து 20 ஆயிரம் பென்குயின்களுக்கு மத்தியில் ஒன்று மட்டும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் எங்கள் கவனத்தை ஈர்த்தது. மற்ற அனைத்தும் சாதாரணமாக இருந்தபோது இது ஒன்றுமட்டும் அவற்றிலிருந்து வித்தியாசமாக தெரிந்தது. அதை உற்றுப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் எங்கள் கைகளிலிருந்த அனைத்தையும் கீழே போட்டுவிட்டு அந்த பென்குயினை நோக்கி ஓடினோம்.
அந்தப் பறவை சற்று தொலைவில் இருந்திருந்தாலும் எங்களால் அதை சரியாக பார்த்திருக்கமுடியாது. அந்தவகையில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே மிகவும் நெருக்கமாக இருந்தது அந்த பென்குயின். இந்த பென்குயினை பொதுவாக ‘லூசிஸ்டிக்(leucistic)’ பென்குயின் என்று அழைப்பர். இதனுடைய செல்கள் மெலனின் நிறமியை சுரக்காததால் இறக்கைகளுக்கு கருப்புநிறம் கிடைக்காமல் அவை மஞ்சள் மற்றும் க்ரீம் நிறத்தில் உருவாகின்றன.
இதேபோல் 2021ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் சின்ஸ்ட்ராப் பென்குயின் காலனியில் வெள்ளைநிற பென்குயின் கண்டறியப்பட்டது. மரபணு மாற்றங்களால் அவ்வாறு உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்’’ என்கிறார்.
ஆராய்ச்சியாளர் டேனியேல் தாமஸ் இதுபற்றி கூறுகையில், ‘’விஞ்ஞானரீதியாக அழைக்கப்படும் ஐந்துவகையான avian plumage நிறமிகளிலிருந்து இது மாறுப்பட்டுள்ளதால் இது ஆறாவது வகையாக எடுத்துக்கொள்ளப்படும். பென்குயின்கள் பொதுவாக தங்கள் துணையை ஈர்க்க மஞ்சள்நிற நிறமியைப் பயன்படுத்துகின்றன. இந்த பென்குயினைப் பொருத்தவரை இந்த நிறமாற்றம் என்பது உடலுக்குள் உருவான மாற்றமாகவே கருதப்படுகிறது’’ என்கிறார்.