பிரிட்டனை 70 ஆண்டுகளாக ஆண்டு வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி மறைந்ததை அடுத்து பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று (செப்., 19) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
குயின் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை காண மன்னர்கள், பிற நாட்டு அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அவர்களோடு கூட ராணி எலிசபெத்தின் செல்லப்பிராணியான கார்ல்டன்லிமா எம்மா என்ற குதிரையும் வின்ட்சர் கோட்டையில் காத்திருந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஆக்கிமிரத்துள்ளன.
ராணியின் தலைமை க்ரூமர் பெண்ட்ரி பெண்டிரிதான் எம்மா குதிரையை அழைத்து வந்திருந்தார். சவப்பெட்டியில் இருக்கும் ராணியை காண அந்த குதிரை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து விண்ட்சர் கோட்டை வரை கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து வந்திருக்கிறது என இண்டிபெண்டெண்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ராணியின் சவப்பெட்டி அணிவகுத்துச் செல்லும் அரச காவலர்களுக்கு மத்தியில் கடந்து சென்றபோது க்ரூமர் பெண்ட்ரியும் குதிரை எம்மாவும் அசையாமல் நின்று மரியாதையுடன் வணங்கினார்கள். இது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த வரலாற்று நிகழ்வை காண பலரும் உணர்ச்சிகரமாக இருந்த நிலையில், ராணி எலிசபெத்திற்கு விசுவாசமாக இருந்து வந்த கருப்பு குதிரையான எம்மாவும் மரியாதை செலுத்தியது காண்போரை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.
தி கார்டியன் தளத்திடம் பேசியுள்ள ராணியின் க்ரூமர் பெண்ட்ரி, “ராணி எலிசபெத்திற்கு சவாரி செய்ய மிகவும் பிடித்தமான குதிரைகளில் எம்மாவும் ஒன்று. ராணி தனது 90வது வயதில் கூட எம்மா மீது ஏறி சவாரி செய்திருக்கிறார்.” என உணர்ச்சிப் பொங்க கூறியிருக்கிறார்.
எம்மாவை போல, ராணி எலிசபெத்திற்கு பிடித்தமான மற்றொரு செல்லப்பிராணியான நாய்க்குட்டிகளும் அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்தன. Muick மற்றும் Sandy என்ற இரு நாய்க்குட்டிகளும் பொறுமையாக வெளியே காத்திருந்து ராணியின் சவப்பெட்டி வரும் பணிந்து மரியாதை செலுத்திய காட்சிகளும் காண்போரை கலங்கச் செய்திருக்கிறது.