ரஷ்ய அதிபர் புதின் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீண்ட நாட்களாகவே ஒரு தகவல் பரவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷ்யா தொடுத்துள்ள இந்த போர் ஓராண்டை நெருங்கி செல்கிறது. எனினும், போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தற்போது வரை தெரியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு கொடுப்பதால் ரஷியாவுக்கு எதிராக போரில் வலுவாக சண்டையிட்டு வருகிறது.
இதற்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் நீண்டநாட்களாகவே உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில், 70 வயதான ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் விரைவில் இறந்து விடுவார் என்று உக்ரைன் நாட்டின் ராணுவ உளவுத்துறை தலைவர் கிரிலோ புடானோவ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "புதின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நினைக்கிறோம். புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் எங்களுக்கு வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.