ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடை பட்டியலில் புடினின் ரகசிய காதலி பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் ராணுவமும் துணிச்சலாக சண்டையிட்டு வருவதால், இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என்றும் இதன்மூலம் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மிஷல் வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 5 விதமான தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் புதிதாக ஆறாவாது விதிக்கப்படும் தடைப் பட்டியலில், அதிபர் புடினின் ரகசிய காதலி எனக் கூறப்படும் அலினா கபேயேவா பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவியை விவாகரத்து செய்துள்ள புடின், ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினாவுடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், அதை புடின் மறுத்து வருகிறார்.
இதையும் படிக்கலாம்: உக்ரைன் போரால் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை - ஐநாவில் இந்தியா கவலை