உலகம்

"கேப்டனிடம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும்; கவலை வேண்டாம்" - இம்ரான் கான்

"கேப்டனிடம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும்; கவலை வேண்டாம்" - இம்ரான் கான்

JustinDurai

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், அதை முறியடிக்க பல்வேறு திட்டங்கள் இருப்பதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கானே காரணம் எனக் கூறி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரீஃப் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அரசை காப்பாற்றிக் கொள்ள இம்ரான் கானுக்கு 172 வாக்குகள் தேவை. அவருக்கு ஆதரவு அளித்த இரு கட்சிகள் தற்போது எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துள்ளதால், அரசுக்கு எதிராக 176 எம்.பி.க்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க பல்வேறு திட்டங்கள் இருப்பதாக தெரிவித்தார். கேப்டனிடம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும் எனக் கூறிய இம்ரான் கான், மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், வெற்றியாளராக வருவேன் என்றார். மேலும், தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்காவின் சதி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால் இம்ரான்கானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு பிரதமரும் ஐந்து ஆண்டு காலம் முழுமையாக பதவியில் நீடித்தது இல்லை. அதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இதுவரை எந்தவொரு பிரதமரும் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் இல்லை.

கடைசி பந்து வரை விளையாடுவேன் எனக் கூறியிருக்கும் இம்ரான் கான் எதிர்க்கட்சிகளின் விக்கெட்டுகளை தனது அரசியல் கிரிக்கெட்டில் வீழ்த்துவாரா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இன்று தெரிந்துவிடும்.

இதையும் படிக்க: இலங்கை முழுவதும் அமலுக்கு வந்தது 36 மணி நேர ஊரடங்கு