கடந்த கால அடிமையின் காதலை தீமாக வைத்து எடுக்கப்பட்ட திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சமீப காலங்களாக திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக தீம் வைத்து ப்ரீ - வெட்டிங் போட்டோஷூட் செய்வது அதிகரித்து வருகிறது. இதில் சில பாராட்டுகளைப் பெற்றாலும் சில சர்ச்சைக்குள்ளாகி விடுகிறது. அந்தவகையில் சமீபத்தில் ஒரு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் வைரலாகி பலரின் கேலிக்கும் ஆளாகி இருக்கிறது.
கடந்த கால ஒரு அடிமையின் காதலை மையப்பொருளாக வைத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் அது. அதில், உடை மற்றும் பொருட்கள் என அனைத்தையும் கடந்த காலத்தைப் போன்றே பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை டிக்டாக் பயனாளி ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்தக் கலப்பின ஜோடியில் ஆண் அடிமை வேடமிட்டிருக்கிறார். கரும்புத் தோட்டத்தில் சந்தித்துக் கொள்வதைப்போன்று உயரமான செடிகளின் நடுவே இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். கையில் விலங்குடன் இருக்கும் அந்த ஆண் ஒரு படத்தில் கோட் அணிந்துகொண்டும், மற்ற படங்களில் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போன்றும் எடுத்திருக்கின்றனர்.
#Slavery’, ‘#Racism’, ‘#WhitePeople’, ‘#BlackTikTok’ and ‘#BlackLivesMatter’ போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டிருந்த இருந்த போஸ்ட்டில் 1840-களின் காதலை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒவ்வொரு படங்களிலும் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் இந்த ஜோடியை கலாய்த்து வருகின்றனர். மேலும் அந்த காலத்தில் அடிமைகளுக்கு நடந்த கொடுமைகளை சுட்டிக்காட்டி இதுபோன்ற தவறான மையப்பொருள்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஜோடி யார் என்றே தற்போதுவரை தெரியவில்லை என்பதுதான் அல்டிமேட்.