நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சிரியா, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அந்தமான் தீவு, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சங்கிலியாக சிறிய மற்றும் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்டு உள்ளது. 300 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மக்கள் வசிக்காத இந்த தீவுகளுக்கு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்:
பிப்ரவரி 6:
துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இதில் 50 ஆயிரம் பேர் பலியாகினர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின.
அன்றைய தினமே, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், ஈராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 5,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன்லாந்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
பிப்ரவரி 14:
ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 15:
நியூசிலாந்தில் 6.1 அளவிலும் கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 16:
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஓசன்வியூவில் 4.8 ரிக்டர் அளவிலும் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 5.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 17:
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியது. குஜராத்தின் ராஜ்கோட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 19:
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் சில பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. .
பிப்ரவரி 23:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபைசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.8, 5.0, 5.2 ஆக பதிவாகின. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 24:
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டது. அதேபோல், அம்ரெலி பிராந்தியத்தில் 3.4 மற்றும் 3.1 ரிக்டர் அளவில் இரண்டு லேசான நிலநடுக்கங்களும் ஏற்பட்டன.
பிப்ரவரி 26:
ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவாக பதிவானது. ஃபைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், குஜராத்தின் ராஜ்கோட் அருகே 4.3 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 28:
மணிப்பூரில் அதிகாலை 2.46 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் 3.2 ரிக்டர் அளவிலும், மேகாலயாவின் துரா மாவட்டத்தில் 29 கி.மீ ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் அதிகாலை 4.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 36.38 அட்சரேகை மற்றும் 70.94 தீர்க்கரேகையில் தாக்கியது. அதேபோல தஜிகிஸ்தானிலும் அதிகாலை 5:31 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 38.20 அட்சரேகை மற்றும் 73.85 தீர்க்கரேகையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது.
மார்ச் 2:
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது. தஜிகிஸ்தான் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மார்ச் 6:
குஜராத்தின் துவாரகாவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மார்ச் 7:
அந்தமான் நிக்கோபர் தீவுகளின் திக்லிபூர் பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மார்ச் 8:
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிகாலை 3.42 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலும், அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் அதிகாலையில் 3.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 10:
ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் நகருக்கும் தெற்கே 101 கி.மீ தொலைவில் காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவானது.
- ஜெ.பிரகாஷ்