morocco pt web
உலகம்

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது மொராக்கோ.. தரைமட்டமானது வீடுகள் - 632 பேர் பலியான சோகம்!

மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 632 மக்கள் பலியாகியுள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Angeshwar G

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ளூர் நேரப்படி இரவு 11.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோவில் மாரகேஷ் பகுதிகளின் அருகில் அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 632 பேர் வரை இறந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சிகிச்சைகளுக்காக அவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11.11 மணியளவில் ஏற்பட்ட முதற்கட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவான நிலையில் 19 நிமிடங்களுக்கு பிறகு இரண்டாம் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடைபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மொராக்கோவில் நில நடுக்கத்தின் காரணமாக மக்கள் அங்கும் இங்கும் ஓடுவது வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இருந்த போதும் அதன் உண்மைத் தன்மையை யாரும் உறுதிப் படுத்தாதது குறிப்பிடத்தக்கது.

மொராக்கோவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்கும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடி தனது வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மொராக்கோவில் ஏற்பட்டிள்ள நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் என் நினைவுகள் மொராக்கோ மக்களைச் சுற்றியே உள்ளது. தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்த மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் வேகமாக குணமடையட்டும். மொராக்கோவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.