கொரோனா வைரஸை காரணம் காட்டி தொழிலாளர்களைச் சுரண்டுவது நியாயமல்ல என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வாடிகனில் நூலகத்திலிருந்து உரையாற்றிய போப் பிரான்சிஸ், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் கண்ணியத்தை மதித்து நடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸின் தாக்கம் அனைவரையும் பாதிக்கிறது உண்மை தான் எனினும், மக்களின் கண்ணியத்தையும் கட்டாயம் மதிக்க வேண்டும் எனக் கூறினார்.
மே 1 ஆம் உழைப்பாளர் தினத்தன்று, நிறையத் தொழிலாளர்கள் தங்களின் நிலை குறித்து தனக்குத் தெரிவித்ததாகச் சுட்டிக்காட்டி போப் இவ்வாறு கூறினார். குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார். முன்னதாக கொரோனா தொடர்பாக மக்களிடம் உண்மையை எடுத்துரைக்கப் போராடும் ஊடகவியலாளர்களுக்காக பிரார்த்தனை செய்ததாக போப் கூறினார்.