லடாக்கில் இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறள் ஒன்றை சுட்டிக்காட்டி பேசினார்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீனப் படைகள் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், லடாக் பகுதிக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்துடன் லே பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு ஆய்வு செய்தார்.
கல்வான் பகுதியில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்த வீரர்களைப் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியன. இதனால் லடாக்கில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ராணுவத்தினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி " இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்கள் தான்; அதே வேலையில் சுதர்சன சக்கரத்தையும் வைத்திருக்கிறோம். நாட்டின் நிலப்பரப்பை அதிகரிக்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சிதான் அடைந்துள்ளனர்" என பேசியுள்ளார்.
மேலும், லடாக்கில் இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறள் ஒன்றை சுட்டிக்காட்டி பேசினார். படைமாட்சி என்ற அதிகாரத்திலுள்ள, ''மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம், எனநான்கே ஏமம் படைக்கு'' என்ற திருக்குறளை குறிப்பிட்ட அவர், படை வீரர்களின் பண்புகள் குறித்து விவரித்தார்.
மோடி பேசுகையில், “படை வீரருக்கான பண்புகள் பற்றி திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ''மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம், எனநான்கே ஏமம் படைக்கு'' என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழியில் நடத்தல், தலைவனின் நம்பிக்கையை பெறுதல் ஆகிய நான்கும் படை வீரனுக்கு தேவையான பண்புகள் என திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.