இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் போர் காலக்கட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் உள்ளிட்டோர் காணாமல் போயினர். இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீண்ட இடைவெளிக்கு பிறகு யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில், போராட்டத்துக்கு சென்ற மக்கள், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், ராஜபக்சவுக்காக அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகள், பேனர்களை கிழித்தும் தீ வைத்து எரித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர். போரின்போது காணாமல்போனவர்களின் நிலை என்னவென்று கேள்வி எழுப்பிய அவர்கள், கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களையும் விடுவிக்கவும் வலியுறுத்தினர். தமிழ் மக்களின் கடும் போராட்டம் காரணமாக மகிந்த ராஜபக்சவின் நல்லூர் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக நேற்றைய தினம் இலங்கை யாழ்பாணத்தில் கந்தரோடை விகாரைக்கு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு செல்வதை அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்த்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.