உலகம்

இந்திய ஆடையில் ஜொலித்த பாக். நடிகை... வசவுகளுடன் வரிசைக்கட்டிய நெட்டிசன்ஸூக்கு நச் ரிப்ளை!

இந்திய ஆடையில் ஜொலித்த பாக். நடிகை... வசவுகளுடன் வரிசைக்கட்டிய நெட்டிசன்ஸூக்கு நச் ரிப்ளை!

JananiGovindhan

இந்தியாவில் மணப்பெண்கள் திருமணத்தின் போது அணியும் லெஹெங்கா ஆடையை பாகிஸ்தானை சேர்ந்த நடிகையான உஷ்னா ஷா தனது திருமணத்தன்று அணிந்திருக்கிறார். இதற்கு இணையவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

கோல்ஃப் வீரரான ஹம்சா அமினை குடும்பத்தினர் சூழ அண்மையில் கரம்பிடித்தார் நடிகை உஷ்னா ஷா. அவர்களது திருமணத்தின் போது உஷ்னா இந்தியாவில் அணிவதை போல லெஹெங்காவும், ஹம்சா ஷெர்வானியும் அணிந்திருந்தார்கள். இந்தியர்களின் பாரட் நிகழ்வு உஷ்னா ஹம்சா திருமணத்திலும் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்களும், ஃபோட்டோகளும் உஷ்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது படு வைரலானதோடு, பலரது எதிர்ப்பையும் பெற்றிருக்கிறது.

பாகிஸ்தானின் கலாசாரத்தை சீரழிக்கும் விதமாக இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள் என்றும், பாகிஸ்தானுக்கு என தனி பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மத நம்பிக்கைகள் இருக்கின்றன என்றும் பதிவிட்டிருக்கிறார்கள் இணையவாசிகள். குறிப்பாக, “இந்தியர்களின் வழிமுறைகளை பாகிஸ்தானில் திணிக்க வேண்டாம். நாமெல்லாம் இஸ்லாமியர்கள். இதுபோன்ற கலாசாரங்களை நாம் அனுமதிப்பதில்லை. எதிர்மறை எண்ணங்களை பரப்புவதை நிறுத்துங்கள்” எனக் கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் பலரும் உஷ்னா ஷாவை வசை பாடியிருக்கிறார்கள். இந்த வசைவுகள் தொடர்ந்துக் கொண்டிருக்கும் இதே வேளையில், “என்னுடைய உடை மீது பிரச்னை இருக்கிறவர்களுக்கு: நீங்கள் என் திருமணத்துக்கு அழைக்கப்படவும் இல்லை. என்னுடைய அழகிய சிவப்பு நிற ஆடைக்கு பணமும் கட்டவில்லை.

என் நகைகள், திருமண ஆடை அனைத்தும் பாகிஸ்தானிதான். என்னுடைய மனதும்தான். இருப்பினும் நான் பாதி ஆஸ்ட்ரியன். கடவுள் எங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். அழையா போட்டோகிராஃபர்களாக வந்தவர்களுக்கு என்னுடைய வணக்கமும் நன்றியும்.” என உஷ்னா ஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் உஷ்னா கொடுத்த பதிலடியும் ஒரு சேர வைரலாகி வருகிறது. இதனிடையே பல இஸ்லாமியர்களும் உஷ்னாவின் ஆடை தேர்வுக்கு ஆதரவாகவே பதிவிட்டு வாழ்த்தவும் செய்திருக்கிறார்கள். மேலும், “உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இன்னமும் நீயா நானா என இன மத வேறுபாட்டுடன் இருப்பது எத்தகைய நன்மையையும் கொடுத்துவிடாது” என்றும், “என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர்களுக்கு தெரியும். அதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு” என்றும், “யாதும் ஊரே யாவரும் கேளீர் போல செயல்பட வேண்டும்” என்றும் கமென்ட்டுகள் இடப்பட்டிருக்கின்றன.