உலகம்

ரூ.1400 கோடி முறைகேடு புகார் - நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் கைது

ரூ.1400 கோடி முறைகேடு புகார் - நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் கைது

rajakannan

வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் சகோதரர் ஷபாஸ் ஷரீஃப் கைது செய்யப்பட்டார். 

நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரான ஷபாஸ் ஷெரீப் தான் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். பஞ்சாப் மாகாணத்தில் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக உள்ள ஷபாஸ் மீது இரண்டு ஊழல் புகார்கள் எழுந்தன. ஆஷியானா வீடுகள் கட்டமைப்பு திட்டத்தில் ஷபாஸ் ஷரீஃப் ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் முறைகேடு செ‌ய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த புகார்கள் தொடர்பாக, பாகிஸ்தான் ஊ‌ழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர். ஷபாஸ் ஷரீஃப் முரணான தகவல் அளித்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இவரது கைதுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்‌ளனர்.

இதனையடுத்து, ஷபாஸ் ஷெரீப் இன்று லாகூரில் உள்ள பொறுப்புடைமை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனால், லாகூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.