உலகம்

ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' - யார் இந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ்?

ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' - யார் இந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ்?

JustinDurai

யானைகளுக்கும் அதனை வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை கண்டு வியந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்கு அதைப்பற்றி குறும்படம் எடுக்க வேண்டும் என எண்ணம் உதித்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் ஆவண திரைப்பட பிரிவில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 'தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' என்ற ஆவண குறும்படமும் தேர்வாகி இருந்தது. இப்படம், நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களான காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கும் இடையிலான பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை  உதகையைச் சேர்ந்த பெண்ணான கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில், 'தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இதன்மூலம் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய குறும்படம் என்கிற சாதனையையும்  'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படைத்துள்ளது.

'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' உருவான விதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்த 5 மாத அம்முக்குட்டி என்றழைக்கப்படும் பொம்மி யானையும் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டது. இதை பராமரிக்கும் பொறுப்பினை பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரிடம் வனத்துறை ஒப்படைத்தது. இந்த இரு யானைகளுக்கும், வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து குறும்படம் இயக்க வேண்டும் என கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்கு ஐடியா வந்துள்ளது. இதையடுத்துதான் கடந்த 2017-ம் ஆண்டு 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தை இயக்க தொடங்கி இருக்கிறார் கார்த்திகி. இந்த குறும்படத்தை எடுத்து முடிக்க அவருக்கு 4 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

யார் இந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ்?

உதகையைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு எப்போதுமே காடுகள், கானுயிர் மீது ஈர்ப்பு அதிகம். குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் புதைந்து கிடக்கும் இயற்கை அழகையும், காட்டின் அதிசயங்களையும் காட்சிப்படுத்துவதில் அவருக்கு ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து காட்டுயிர் புகைப்படக் கலைஞராக வலம்வந்த கார்த்திகி, ஒருநாள் யாதார்த்தமாக பொம்மன், பெள்ளி தம்பதியரையும் அவர்கள் வளர்த்துவரும் யானைகளையும் சந்தித்திருக்கிறார்.

இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்பு கார்த்திகியை ஈர்க்கவே, 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' குறும்படத்தை இயக்கத் தொடங்கி இருக்கிறார். அந்த வகையில அவர் இயக்கிய 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' குறும்படம்தான் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.