நமது அண்டை நாடான சீனா, வித்தியாசமான நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் தனித்துவம் பெற்றது. அந்த வகையில், சீனாவில் தற்போது ஒருநாள் திருமணம் என்ற கான்செப்ட் ட்ரெண்டாகி வருகிறது!
’ப்ரியமானவளே’ படத்தில் விஜய், ’ஓர் ஆண்டு மட்டும் திருமண வாழ்க்கையில் ஈடுபடுவோம். அதன்பின் பிடித்திருந்தால் தொடர்வோம்; இல்லையென்றால் பிரிந்துவிடுவோம்’ என ஓர் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். படத்தின்படி, ஓராண்டு திருமண வாழ்க்கைக்குப் பின், விஜய் பிரிந்து செல்வார். பின் மீண்டும் சேர்வாரென கதைக்களம் இருக்கும்.
இதில் அந்த One year agreement Contract-ஐ, ஒரு நாளுக்கான ஒப்பந்தமாக போட்டால் எப்படி இருக்கும்? அப்படியான ஒன்றுதான் சீனாவில் நடக்கிறது! இதில் விஷயம் என்னவென்றால், ஒரேநாளில் திருமணம் செய்துகொண்டு அன்றே பிரிந்துவிடுவார்களாம்.
வடக்குச் சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில்தான் இந்த ஒருநாள் மட்டும் திருமணங்கள் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் திருமணம் பற்றிய மரபுகளும், கலாசாரங்களும் பாரம்பரியமும் ஒவ்வொரு வகையில் இருக்கும். எப்படியிருந்தாலும் எல்லாவற்றுக்கும் கான்செப்ட் ‘வாழ்க்கைத்துணை’, அதாவது ‘வாழ்க்கைக்கே துணை’ என்பதுதான். அப்படியிருக்க சீனாவில் ஒருநாள் மட்டுமே கணவன் - மனைவி என்ற இந்த வழக்கம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அதுசரி, இந்த ஒருநாள் கான்செப்ட்டின் பின்னணிதான் என்ன?
சீனாவில், திருமணமாகாமல் இளைஞர்கள் இறப்பது குறித்து பல்வேறு நம்பிக்கைகள் இருப்பதால், இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதாவது சீனாவில் ஒரு ஆண் இறக்கும்போது, அவர் சிங்கிளாக இருக்ககூடாதாம். அப்படி அவர்கள் இறப்பது துரதிஷ்டம் என கருதப்படுகிறது. அப்படி ஒருவேளை அவர் சிங்கிளாக இறந்துவிட்டால், இறந்தபிறகு திருமணம் செய்துவைக்கப்படுகிறது. கடந்தகாலங்களில் இந்த நடைமுறை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்பெல்லாம் திருமணத்தை தவிர்ப்போரின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. சீனாவில் பொருளாதார காரணங்களால் பல இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை என ஓர் ஆய்வில் சமீபத்தில்கூட சொல்லப்பட்டது. திருமணம் செய்யவும் வேண்டும், செய்யாமலும் இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த ‘ஒருநாள் திருமணம்’ ஃபார்மட் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. இது பாரம்பரிய பழக்கமில்லை... இளைஞர்கள் தங்களுக்கு தாங்களே கண்டுபிடித்துக்கொண்ட தீர்வு! கடந்த 5-6 ஆண்டுகளாகவே ஒருநாள் திருமணங்கள் வட சீனாவில் கிராமங்களில் அதிகரித்திருக்கிறதாம்.
சீனாவில் ‘திருமணமாகாத ஆண்கள் மூதாதையரின் கல்லறையில் நுழையக்கூடாது; இறந்தபிறகு அங்கு நல்லடக்கம் செய்யப்படக்கூடாது’ என்றொரு ஐதீகம் இருக்கிறதாம். மேலும் திருமணமாகாமல் இறக்கும் ஆண்களுக்கு, இறப்புக்குப்பின் மோசமான வாழ்க்கை கிடைக்குமென நம்புகிறார்கள் அம்மக்கள். இதைதவிர்க்கவும், ஒருநாள் திருமணம் செய்துவிட்டு அம்மனைவியோடு கல்லறைக்கு சென்று மூதாதையரிடம் ‘நான் திருமணம் செய்துகொண்டேன்’ என சொல்லிவார்கள்களாம். பின் அம்மனைவியை அன்றைய தினமே பிரிந்துவிடுவார்களாம்(!)
இதையும் படிக்க: டெல்லி: ஐபோன் திருடர்களால் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட ஆசிரியை!
இத்தகைய திருமணத்தை நடத்திவைப்பதற்காக அங்கு நிறைய எஜென்சிகளும் உள்ளனவாம். இதற்காக அங்கு பல ப்ரொஃபஷனல் மணமகள்கள் இருக்கின்றனறாம் (ஆணுக்கு மட்டும்தான் இந்த ஐதீகம் என்பதால், அவர்கள்தான் வரன் தேடுகின்றனர். ஆகவே மணமகள்களுக்கான தேடல் அதிகமுள்ளது). இதற்காக வரும் பெண்கள், தங்கள் தேவைக்கேற்ப சம்பளம் பெற்று திருமணம் செய்துகொண்டு பிரிந்துவிடுகின்றன்ராம்.
இதுபோல திருமணங்களுக்குப் பெரும்பாலும் உள்ளூர்ப் பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லையாம். ஆனால், வெளியூரில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும், அதிலும் திருமணமான பெண்களே மீண்டும் மீண்டும் தங்கள் குடும்பத்தினருக்குத் தெரியாமல் இத்தகைய திருமணத்தைச் செய்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு ஒரேநாளில் அப்பெண்கள் தங்களுடைய வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிடுகிறார்களாம். இத்தகைய திருமணத்திற்காக, இளைஞர்கள் கணிசமான பணத்தைச் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்தவகை திருமணங்கள், சீனாவின் பழம்பெரும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், சமீபத்தில் இதுபோன்ற திருமணங்கள் நாட்டில் பரவலாகிவிட்டதாகவும், இவை பெரும்பாலும் ரகசியமாகவே நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே சீனா பல வித்தியாசமான செயல்முறைகளை அமல்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியதை அடுத்து, அதை அதிகரிக்கும் வகையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தம்பதியரை ஊக்குவிக்கும் திட்டங்கள் அரசு தரப்பிலேயே அறிவிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, திருமணம் ஆகாதவர்கள்கூட குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தது. பின் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய விடுமுறை அளித்துது.
இதேபோல வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம், வாடகை அப்பா (Rent a Dad) என்ற சேவையை அறிமுகம் செய்தது. சில நிறுவனங்கள் தோழர்கள் - தோழிகள் தேவைப்படுவோரிடம் பணம்பெற்று, குறுகிய கால தோழமைகளை வாடகைக்கு அனுப்பும் வேலையையும் செய்ததாக சில செய்திகளும் சீன இணையதளங்களில் உலா வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் One Day Marriage என்ற கலாசாரத்தையும் தொடங்கியிருக்கிறார்கள் சீனர்கள்! Modern Problem needs Modern solution!