கணவருடன் கடற்கரையில் நடந்த சென்ற கர்ப்பிணி பெண்ணை வயிற்றில் உதைத்த காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி-டேட் நகரத்தில் வசிப்பவர் ஜோசப் (40). இவரது மனைவி இவோனி முர்ரே (27) 8 மாத கர்ப்பினியாக இருந்துள்ளார். இவருக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்து, தேதி குறித்துள்ளனர். அத்துடன் இந்த நேரத்தில் மனது அமைதியாக இருக்க வேண்டும் எனவும், சிறிது தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்காக ஜோசப் மற்றும் முர்ரே வடக்கு மியாமி கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது அம்பார் பாஸிகோ (26) என்ற காவலர் தனது தங்கை மற்றும் தங்கை குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது முர்ரே மற்றும் அம்பார் தங்கையிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முர்ரே வயிற்றில் அம்பார் உதைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, முர்ரே உடனே அருகில் இருந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வயிற்று வலி அதிகரித்துள்ளது. அடுத்த 7 நிமிடங்களில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது.
இதுதொடர்பாக முர்ரே மற்றும் அவரது குடும்பத்தினர் வடக்கு மியாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அம்பார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அம்பார், “நான் எனது தங்கையுடனும், அவர் குழந்தையுடனும் கடற்கரை சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது? என தெரியவில்லை. முர்ரே என் தங்கையின் முகத்தில் தாக்கினார். நான் அவர்களை பாதுகாத்தேன். மற்றபடி நான் எந்த பெண்ணையும் தொடவில்லை. பெண்களை நான் எப்போது தாக்குவதில்லை. அப்படி இருக்கையில் ஒரு கர்ப்பினி பெண்ணை எப்படி தாக்குவேன்” என்று குற்றத்தை மறுத்துள்ளார்.