உலகம்

அமெரிக்க மாணவர் வடகொரிய சித்ரவதையால் உயிரிழக்கவில்லை: உடற்கூறு ஆய்வில் தகவல்

அமெரிக்க மாணவர் வடகொரிய சித்ரவதையால் உயிரிழக்கவில்லை: உடற்கூறு ஆய்வில் தகவல்

webteam

வடகொரியாவில் 17 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அமெரிக்க மாணவன் ஓட்டோ வார்மியர் பிராண வாயு குறைபாடு காரணமாகவே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டை உளவு பார்க்க வந்ததாக கூறி அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்மியரை வடகொரிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். 17 மாதங்களாக அங்கு சிறைவாசம் அனுபவித்த வார்மியரின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை தொடர்ந்து கோமா நிலையில் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மூளை நரம்புகள் பாதிக்கப்படும் அளவுக்கு அவரை சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வீடு திரும்பிய ஒரே வாரத்தில் வார்மியர் உயிரிழந்தார்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வார்ம‌யரின் பெற்றோரும், வடகொரியா அரசு தங்களது மகனை பலவிதமாக சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டியிரு‌ந்த‌னர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை‌ செய்த மருத்துவர் அதற்கு நேர்மாறாக மூளைக்கு செல்லும் பிராண வாயு குறைந்ததே வார்மியரின் மரணத்துக்கு காரணம் என அறிக்கை அளித்துள்ளார். மேலும் சித்ரவதை செய்ததற்கான எந்தவொரு அடையாளமும் அவரது உடலில் இல்லை என தெரிவித்துள்ளார். எனினும், வலது காலில் மிகப் பெரிய தழும்பு ஒன்று காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.