வட கொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி வட கொரியா அவ்வப்போது கண்டம் கண்டம் விட்டு பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது வழக்கம். அந்தவகையில், சனிக்கிழமையன்று வட கொரியா புதிய ஏவுகணை ஒன்றை சோதித்துள்ளது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக ஜப்பான் மற்றும் தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டு பிறந்தது முதல் கடந்த 2 மாதங்களில் மட்டும், வட கொரியா 9-வது முறையாக ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது. கடைசியாக பிப்ரவரி 27-ம் தேதி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், தென் கொரிய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் வரும் புதன்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வட கொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தில் இருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை 300 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்று வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் விழுந்தததாக ஜப்பான் கூறியுள்ளது.
இதை தென் கொரிய ராணுவமும் நேற்று உறுதிபடுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. புதிய ஏவுகணையை பரிசோதித்த வட கொரியாவிற்கு தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.