உலகம்

2024இல் மூடுவிழா காணும் உலகப்புகழ் பெற்ற நோமா உணவகம் - இப்படியொரு காரணமா!?

2024இல் மூடுவிழா காணும் உலகப்புகழ் பெற்ற நோமா உணவகம் - இப்படியொரு காரணமா!?

JustinDurai

சர்வதேச அளவில் பிரபலமான நோமா உணவகம் அடுத்த ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் உள்ள நோமா ரெஸ்டாரண்ட் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவகம் ஆகும். ரெனே ரெட்ஜெபி என்ற சமையல் கலைஞரால் கடந்த 2003இல் தொடங்கப்பட்ட நோமா உணவகம், அதன் தனித்துவமான சுவை மற்றும் உயர்தர உணவுக்காக குறுகிய காலத்திலே பிரபலமடைந்ததோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், உணவுப் பிரியர்களையும் ஈர்த்தது.

நோமா உணவகம் இதுவரை 3 மிச்செலினின் ஸ்டார் விருதுகளை வென்றுள்ளது. சமையல் கலைக்கு சர்வதேச அளவில் வழங்கப்படும் ஒரு உயரிய அங்கீகாரமாக மிச்செலின் நிறுவனத்தின் மிச்செலின் ஸ்டார் விருது கருதப்படுகிறது. 'ரெஸ்டாரண்ட்ஸ்’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த பட்டியலில் நோமா உணவகம் 5 முறை முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான உலகின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலிலும் நோமா உணவகம் முதலிடத்தை பிடித்தது.

அந்தளவுக்கு பிரபலமான நோமா உணவகம்  கடந்த 2021ஆம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிலையில் நோமா உணவகம் வருகிற 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நோமா உணவகத்தின் கட்டிடம் உணவு கண்டுபிடிப்புகளுக்கான பிரமாண்ட ஆய்வகமாக மாற்றப்படும் என அதன் உரிமையாளர் ரெனே ரெட்ஜெபி தெரிவித்துள்ளார்.