2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஐகேன் என்ற அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த நான்கு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூலக்கூறு அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளுக்களில் சிறந்து விளங்கிய ஜெப்ரி ஹால், மிக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்த விஞ்ஞானிகள் ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ் மற்றும் தோர்ன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இவர்கள் உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை நிரூபணம் செய்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்கான மைக்ரோஸ்கோப்பி வடிவமைத்த விஞ்ஞானிகள் ஜேக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹெண்டர்சன், ஜோசிம் ஃபிராங்க் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் வேதியியல் பிரிவில் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நோபல் பரிசு கமிட்டித் தலைவர் ரெய்ஸ் ஆண்டர்சன் இதை அறிவித்தார். இந்த பரிசுக்காக அணுஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஐகேன் என்ற அமைப்பு தேர்வாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பானது 468 பங்கீட்டாளர்களுடன் 101 நாடுகளில் செயல்பட்டு வருகிறாது. இந்த ஐகேன் அமைப்பின் தலைவர் அணுஆயுதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பீட்ரைஸ் ஃபிஹின் ஆவார்.