அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜோ பைடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரத்தில், அமெரிக்க ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன் என கூறியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியா மீது கடந்த காலங்களில் இத்தகைய புகார் எழுப்பியவர்கள் யார் என்பதை இந்த தருணத்தில் உற்று நோக்க வேண்டியது அவசியம்” எனக் கூறினார். மேலும், “ஒபாமா ஆட்சி காலத்தில்தான் சிரியா, ஏமன், சவுதி, ஈராக் போன்ற ஆறு இஸ்லாமிய நாடுகள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தியாவை குறைகூறும் ஒபாமாவை அமெரிக்க மக்கள் எப்படி நம்புவார்கள்?
அமெரிக்காவுடன் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள இந்தியா விரும்பும் சூழலில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் கருத்தும் வியப்பை தருகிறது. வெளியுறவு விவகாரங்களில் கருத்தை தெரிவிப்பதில் கட்டுப்பாடு காத்து வருகிறோம். பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் உயரிய விருதுகள் வழங்கியுள்ள நிலையில், அவற்றில் 6 இஸ்லாமிய நாடுகள்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை தேர்தலில் வீழ்த்த முடியாததால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் வேண்டுமென்றே அடிப்படை ஆதாரமற்ற தரவுகளை வெளிநாடுகளில் பேசிவருகிறது. இதுவே ஒபாமா போன்றவர்களின் கருத்துகள் வெளியாகக் காரணம். ஆனால், இதுபோன்ற பொய் பரப்புரைகளை இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உட்பட மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர்” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்