உலகம்

மக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி

மக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி

jagadeesh

சீனாவில் பரவி வரும் கொரானோ வைரஸால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் பீதி ஏற்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் 2002, 2003-ஆம் ஆண்டுகளில் சார்ஸ் என்ற வைரஸ் பரவியது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 774 பேர் உயிரிழந்தனர். தற்போது அதே வகையிலான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் மைய நகரான வுஹானில் உள்ள மக்களுக்கு இனமறியா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. இது சார்ஸ் வைரஸை போலவே கொரானோ வகை வைரஸ் என மருத்துவர்கள் கூறினர். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சொல்லப்பட்டது. கொரானோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் ஏற்படுகிறது. பின்னர் மூச்சு விட சிரமப்பட்டு உயிரிழக்கின்றனர்.

சுமார் 10 லட்சம் மக்கள் வாழும் வுஹான் நகரில் கொரானோ வைரஸ் பரவியுள்ளது. இது சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பரவி வருகிறது. பெய்ஜிங், ஷாங்காய், ஷென் ஷென் ஆகிய நகரங்களிலும் பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் விலங்கிடம் இருந்து வைரஸ் பரவியதாக சொல்லப்பட்ட நிலையில் மனிதர்களிடம் இருந்தும் பரவுகிறது என்பதை சீன மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மருத்துவ ஊழியர்கள் 15 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதே இதற்கு உதாரணம். சீனாவில் சுமார் 200-க்கும் அதிகமானவர்கள் கொரானோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியிலும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. தாய்லாந்தில் இருவர், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவர் கொரானோ வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சீனாவின் வுஹானில் இருந்து தாயகம் திரும்பியவர்கள். கொரானோ வைரஸ் பரவியதன் அறிகுறி காய்ச்சல் மற்றும் இருமல். சாதாரண காய்ச்சலுக்கும் இதே அறிகுறிகள் இருக்கும் என்பதால் பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இது சாதாரண காய்ச்சல் என கருதி முறையான மருத்துவம் பார்க்காமல் இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வரும் 25ஆம் தேதி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோடிக்கணக்கானவர்கள் தாயகம் செல்வர். இந்த காலகட்டத்தில் அதிகமானவர்களுக்கு வைரஸ் பரவலாம் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே பல்வேறு நாட்டு விமான நிலையங்களிலும் சீனாவில் இருந்து வருபவர்கள் முழு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது வரை சீனாவில் மட்டுமே சுமார் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சார்ஸ் போல இதுவும் ஆசிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இதனை எதிர்கொள்வது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை கூட்ட உள்ளது.