உலகம்

`காற்றில் வேகமாக பரவுகிறது' - உருமாறிய புதிய வகை கொரோனாவால் நிம்மதி இழந்த வியட்நாம்!

`காற்றில் வேகமாக பரவுகிறது' - உருமாறிய புதிய வகை கொரோனாவால் நிம்மதி இழந்த வியட்நாம்!

நிவேதா ஜெகராஜா

கொரோனாவை எதிர்த்து முழுமையாக வெற்றிகண்ட வியட்நாமில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், அது வேகமாக பரவி வருவதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடு என்றால் அது வியட்நாம்தான். 9.7 கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் இந்த தொடக்கத்தின்போது கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 270 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில், வியட்நாம் வெற்றிகரமாக கடந்த ஆண்டு கட்டுப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் 63 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் 31 இடங்களில் இருந்து அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்த திடீர் பாதிப்புக்கு காரணம், புதிய வகை கோவிட் திரிபு அந்த நாட்டில் வேகமாக பரவி வருவது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கோவிட் திரிபு இந்திய வேரியன்ட் வைரஸ் மற்றும் இங்கிலாந்து வேரியன்ட் வைரஸின் கலவையாகும். இந்த திரிபு காற்றில் மிக வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசியுள்ள வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன், "இந்த புதிய வகை திரிபு மிக ஆபத்தானது. புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு நடத்திய மரபணு சோதனையில் இந்தியா மற்றும் இங்கிலாந்தின் கலவையான ஒரு புதிய மாறுபாட்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இன்னும் குறிப்பாக, இது ஒரு இங்கிலாந்து மாறுபாடாகும், இது முதலில் இங்கிலாந்து வகையைச் சேர்ந்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாட்டை விரைவில் உலகிற்கு வியட்நாம் அறிவிக்கும். பழைய வகை திரிபுகளை காட்டிலும், இந்த புதிய வகை திரிபு வேகமாக பரவி வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக வியட்நாமில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கி இன்றுவரை அந்நாட்டில் 6,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல், அதாவது 3,600 பேர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி பாதிக்கப்பட்டவர்கள். மேலும் அங்கு இதுவரை 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் . எனினும் தற்போது பரவி வரும் திரிபு அந்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.