உலகம்

நேபாள விமான விபத்து - அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்துறை அமைச்சகம் தகவல்

நேபாள விமான விபத்து - அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்துறை அமைச்சகம் தகவல்

Veeramani

நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என நேபாள உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டின் பொதுத்துறை நிறுவனமான "தாரா ஏர்லைன்ஸ்"-க்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 16 நேபாளிகள் மற்றும் 3 விமான பணியாளர்களுடன் நேபால் தலைநகர் காத்மண்டுவிற்கு மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காரவிலிருந்து வட மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோன்சோம் நோக்கி சென்றது.



விமானத்தின் பயண நேரம் 20 நிமிடங்கள் ஆகும்; இடைப்பட்ட நேரத்தில் தரை இறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக விமானத்தை மீண்டும் தொடர்பு கொள்ளக்கூடிய பணிகளை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்த நிலையில் பலன் அளிக்கவில்லை.

இதனால் விமானம் இறுதியாக தொடர்பை இழந்த பகுதிக்கு மீட்புப் படையினரை நேபாள நாட்டு அரசு அனுப்பியது. அதே நேரத்தில் நேபாளம் திபெத் எல்லையில் உள்ள இமயமலையின் லியாங்கோ கோலா நதிக்கரையில் ஒரு விமானம் விழுந்து தீ பிடித்து இருப்பதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அரசு அதிகாரிகளும் மீட்பு பணியினரும் விபத்து நடந்த இடத்தை அடைந்தபோது இரவு நேரம் என்பதால் விமானத்தின் நிலை குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் மேற்கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் மீண்டும் இன்று காலை முதல் மீட்பு பணிகள் தொடங்கியது. விபத்து நடந்த இடம் 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளதால் ஹெலிகாப்டர் மூலமாக 15 நேபாள ராணுவ வீரர்கள் 11 ஆயிரம் அடி உயரத்தில் இறக்கி விடப்பட்டனர். பிறகு அங்கிருந்து விபத்து நடந்த இடத்திற்கு காடுகள் வழியாக சென்ற மீட்டுக் குழுவினர் இதுவரை 14 உடல்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 14 பேரின் உடலும் நேபாள தலைநகர் காட்மண்டுவிற்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீட்பு குழுவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.



மீட்புக்குழுவில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தகவலின்படி விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருப்பதாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதீந்திர மணி பொக்ரேல் தெரிவித்துள்ளார்.