செக் மோசடி வழக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்ட துஷார் வெள்ளப்பள்ளிக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து துஷார் வெள்ளப்பள்ளி என்பவர் போட்டியிட்டார். பாரத் தர்ம ஜன சேனாவின் தலைவரான அவர், ராகுலை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். இவர் கேரள மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராகவும் இருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த துஷார் வெள்ளப்பள்ளி, ரூ.19 கோடி அளவுக்கு செக் மோசடி செய்ததாக நஸில் அப்துல்லா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அஜ்மன் நகருக்கு சென்ற துஷார் வெள்ளப்பள்ளி, அவர் தங்கியிருந்த விடுதியில் கைது செய்யப்பட்டார்.
அவரது கைது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “ஐக்கிய அரபு நாட்டில் துஷார் வெள்ளப்பள்ளி கைது செய்யப்பட்டதாக அறிந்தேன். அவரது தற்போதைய நிலை குறித்து அறியமுடியவில்லை. துஷாருக்கு தேவையான சட்டரீதியான உதவி செய்யவேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை தலையிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் துஷாருக்கு அஜ்மான் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. ஜாமினுக்கான ரூ.1.9 கோடியை, அங்குள்ள தொழிலதிபர் யூசுப் அலி என்பவர் செலுத்தியதை அடுத்து, துஷார் விடுவிக்கப்பட்டதாக அவரது தந்தை வெள்ளப்பள்ளி நடேசன் தெரிவித்துள்ளார்.
’’நில விற்பனை தொடர்பாக துஷார் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். விடுதியில் இருந்தபோது, திடீரென போலீசார் கைது செய்வதாக அறிவித்துள்ளனர். எதற்காக கைது என்பது கூட துஷாருக்குத் தெரியவில்லை. ஜாமின் கிடைத்த பின், அவரிடம் பேசினேன். பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால், உடனடியாக அவர் இந்தியா திரும்ப இயலவில்லை. பாஸ்போர்ட் கிடைத்தபின் துஷார் திரும்புவார். வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்’’ என்றார் நடேசன்.