சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமிக்கு அடுத்தபடியாக கடல் இருக்கும் ஒரு பகுதியை, நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் படம் எடுத்துள்ளது. அது ஓர் நிலா என்பது கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது! வேற்று கிரகத்தில் மனிதன் வசிக்க முடியுமா என்ற விவாதம் எழுந்து வரும் நிலையில், கடல் ஒன்று சூரிய குடும்பத்திற்குள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விண்வெளி ஆய்வுகளில் திருப்பு முனையாக அமையும் என கூறப்படுகிறது.
நாசா வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவலின்படி, சனி கோளின் ஒரு சந்திரனான என்செலடஸ் என்ற நிலவிலிருந்து 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று வெளியேற்றப்படுவது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2005-இல் சந்திரனை சுற்றியுள்ள துணைக்கோள்களில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தற்போது புதிதாக எடுத்துள்ள படத்தின் மூலம் சனி கிரகத்தில் கடல் ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வெறும் 313 மைல் விட்டமே கொண்ட இந்த நிலவின் கடல் அளவு, பூமியில் உள்ள கடலின் அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் என்செலடஸ் நிலவின் அளவைவிட 20 மடங்கு தொலைவிற்கு நீர் வெளியேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலவை சுற்றியுள்ள வளையம் போன்ற அமைப்பில் இருந்து நீர் மூலக்கூறுகள் உறிஞ்சப்படுவதாகவும், அவை மீண்டும் வெளியேற்றப்படுவதாகவும் ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமிக்கு அடுத்தபடியாக உயிர்கள் வாழக்கூடிய வகையில் அமைப்பைப் பெற்ற நிலவாக என்செலடஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வருங்காலத்தில் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதற்கு ஜேம்ஸ் வெப் எடுத்த இந்த தரவுகள் பயன்படும் என நம்பப்படுகிறது.