செவ்வாய் கிரத்தில் ஆக்ஸிஜனை உருவாக்க ஆல்கா எனப்படும் பாசி வகைகள் மற்றும் பாக்டீரியாவை 2020-ல் எடுத்துச்செல்ல நாசா முடிவெடுத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் க்யூரியாசிட்டி என்ற விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா வெண்வெளி ஆய்வு மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்தப் போவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கனடா வாழ் அமெரிக்கரான வர்த்தகர் எல்கான் முஸ்க் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்க போவதாக அறிவித்துள்ளார். அதற்காக ஒரு நபருக்கு ரூ.65 ஆயிரம் கோடி (10 மில்லியன் டாலர்) கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
பொதுவாக உயிரினங்கள் வாழ ஆக்ஸிஜன் தேவை. ஆனால் செவ்வாய் கிரக வழி மண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு மற்றும் மிக குறைந்த அளவில் நைட்ரஜன் உள்ளிட்ட வாயுக்கள் உள்ளன. ஆதலால் உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்ஸிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு ஆல்கா எனப்படும் பாசி இனங்கள் மற்றும் பாக்டீரியாவை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது. இந்த விண்கலம் மூலம் ஆல்கா எனப்படும் பாசி இனங்கள் மற்றும் பாக்டீரியாவை கொண்டு செல்கிறது. அங்கு இவை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த தகவலை நாசாவின் தலைமை நிர்வாகி ராபர்ட் லைட்புட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அங்கிருந்து ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்ப எரிபொருளாகவும் பயன்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் மூலம் இத்திட்டம் சாத்தியமா என்ற கோணத்திலும் ஆய்வு மேற் கொள்ளப்பட உள்ளதாகவும் ராபர்ட் கூறினார்.