அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புயல் காரணமாக பலத்தமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தெற்கு கலிபோர்னியா கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள கிழக்கு சாண்டா பார்பரா, ரோமரோ கேன்யான், மான்டெசியோ உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏராளமான ஹெலிகாப்டர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சாண்டா பார்பரா பகுதியில் சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிலச்சரிவில் சிக்கின. இந்த நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடி வருபவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.