உலகம்

ஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு

ஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு

webteam

ஜி-20 மாநாட்டின் போது இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இந்தியா த‌விர சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பிற உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். மிகவும் பயனுள்ள வகையில் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய -சீன உறவின் அனைத்து அம்சங்களையும் விவாதித்ததாகவும், இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து உழைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்ததாகவும், சீன அதிபருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கிடையில் ராஜங்க உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இரு நாடுகளிலும் தலா 35 நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, "ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், அமேதியில் ரஷ்யா அமைக்கும் ஏ.கே.203 ரக துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளது தொடர்பாக இரு தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாட்டின் போது இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்புக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கணியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து இரண்டு தலைவர்களும் பேசியதாகவும், அங்கு அமைதி திரும்ப இந்தியாவின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளார் ரவீஷ் குமார் தெரிவித்தார். பிற நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதை தவிர்த்தார்.