காபோன் ராணுவ ஆட்சி ட்விட்டர்
உலகம்

நைஜரை தொடர்ந்து கபோனிலும் ராணுவ ஆட்சி: அதிகாரம் மாறியதாக அரசு டிவியில் தோன்றி அறிவித்த அதிகாரிகள்!

மத்திய ஆப்பிரிக்க நாடானா காபோனில் (GABON) நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் இன்று (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளது.

Prakash J

மத்திய ஆப்பிரிக்க நாடானா காபோனில் (GABON) நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் இன்று (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளது. அரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ அதிகாரிகள் நாட்டின் நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும், நாட்டின் எல்லைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் அலி போங்கோ(ALI BONGO)வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேர்தல் முடிவுகளை ரத்து செய்வதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அலி போங்கோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களால் அலி போங்கோ கவனிக்கப்பட்டு வருகிறார் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபோன் என்பது ஏழ்மைமிக்க நாடாக இருந்தாலும் எண்ணெய் வளம் மிக்கது. இந்த நாட்டை, 1967 முதல் ஓமர் ஆட்சி செய்துவந்தார். இவர், சமீபத்தில் அதிபரில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அலி பெங்கோவின் தந்தை ஆவார். இவர், 2009 முதல் காபோன் நாட்டின் அதிபராக இருந்து வந்தார். இந்த நிலையில், காபோனில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 64 வயதான அதிபர் அலி போங்கோ 64.27% வாக்குகள் பெற்று தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தேர்தல் கமிட்டி இன்று அதிகாலை அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே இத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் இதில் நம்பகத்தன்மை இல்லை இல்லாததாலும் ராணும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதாகத் தெரிவித்தது.

அண்மையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும் மாலி, கினியா, புர்கினா பாசோ மற்றும் சாட் ஆகிய நாடுகளிலும் இராணுவ அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜரில் நடந்தது என்ன?

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில், அதிபராக இருந்தவர் முகம்மது பசோம். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அந்நாட்டு அதிபராக இருந்த முகமது பசோம் தலைமையிலான அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. முன்னாள் அதிபரும் அவர் குடும்பத்தினரும் சிறை வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

நைஜர் ராணுவ ஆட்சி

நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருப்பதாகவும், அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய நைஜர் அரசு, பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், அந்நாட்டைவிட்டு 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.