உலகம்

அமெரிக்கா: பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை சமைத்து குடும்பத்தினருக்கு கொடுத்த கொடூரம்!

அமெரிக்கா: பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை சமைத்து குடும்பத்தினருக்கு கொடுத்த கொடூரம்!

Sinekadhara

அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் இதயத்தை சமைத்து உறவினருக்கு கொடுத்ததுடன் தனது உறவினர்களையும் கொலைசெய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்திலுள்ள க்ரேடி கவுண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன்(42 வயது). இந்த நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஆண்ட்ரியா லின் ப்ளேகென்ஷிப்பை கொலைசெய்து விட்டு வீட்டிற்கு திரும்பி, தனது மாமா மற்றும் அவருடைய பேத்தியையும் கொலை செய்திருக்கிறார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது 67 வயதான ஆண்டர்சனின் மாமா இறந்துகிடந்திருக்கிறார். அவருடைய பேத்தியை உயிருக்கு போராடிய நிலையில் மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். ஆண்டர்சன் தனது அத்தையின் இரண்டு கண்களிலும் கத்தியால் குத்தியிருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பி உயிர்பிழைத்திருக்கிறார்.

ஆண்டர்சனை கைதுசெய்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, பிப்ரவரி 9-ஆம் தேதி அவருடைய பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் இதயத்தை எடுத்துவந்து அதை உருளைக்கிழங்குடன் சமைத்து தனது உறவினருக்குக் கொடுத்ததாக திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார். பேயை விரட்ட தான் இவ்வாறு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

இவரின் வழக்கறிஞர் ஜெசோன் ஹிக்ஸ் கூறுகையில், ’’ ஆண்டர்சன் இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதற்குமுன்பே கொலை, கொள்ளை மற்றும் போதைமருந்து கடத்தல் தொழில்களில் ஈடுபட்டதால் 2017ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தண்டனை ஆளுநர் கெவின் சிட்டால் 9 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தற்போது பரோலில் வெளிவந்த ஆண்டர்சன் தனது அத்தை, மாமா வீட்டில் தங்கியிருந்தார்’’ என்று கூறினார்.

ஆண்டர்சன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, எனக்கு பெயில் வேண்டாம் என நீதிபதி முன்பு கத்தியிருக்கிறார். இதனால் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சமைக்கப் பயன்படுத்திய பொருட்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.