கடற்கரையோர நகரமான டெர்னாவில், டேனியல் புயல் காரணமாக பல கிழக்கத்திய நகரங்கள் பெரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. அதில் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருப்பது டெர்னா நகரம். நகரத்திற்கு வெளியே இருந்த இரண்டு அணைகள் மழைவெள்ளத்தில் இடிந்து விழுந்ததில், டெர்னா மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளம் புகுந்தது. பெரும் வெடி சத்தத்துடன் பீறிட்ட வெள்ளம், எதிர்ப்பட்ட அனைத்தையும் அடித்துச் சென்றது. சுமார் 7 மீட்டர் உயரம் வரை அடித்துவந்த வெள்ளத்தின் பாதையில் இருந்த அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டன.
தற்போதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிக உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன. உயிரிழப்பு 5 ஆயிரத்தைக் கடந்திருப்பதாகவும், 10 ஆயிரம் பேரை காணவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. பலர் குடும்பம் குடும்பமாக உயிரிழந்துள்ளதால் தகவல் தெரிவிக்கக்கூட யாரும் இல்லாத நிலை உள்ளது.
நகரத்தில் ஏழு பிரதான சாலைகள் உள்ள நிலையில், அவற்றில் 2 மட்டுமே மூழ்காமல் இருக்கிறது. டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்களும் இடிந்துள்ளன. கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலங்கள் இடிந்ததோடு, சாலைகளும் வெள்ளத்தில் சிக்கியதால் மீட்புப்பணிகளில் சிக்கல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தும், சேதமடைந்தும் உள்ளன.
அருகில் உள்ள பெங்காசி (Benghazi) நகரத்துக்கு சர்வதேச உதவிகள் வந்துசேரத் தொடங்கியுள்ளன. எகிப்து, அல்ஜீரியா, துனிசியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள், லிபியாவுக்கு மீட்புக்குழுக்களை அனுப்பியுள்ளன. வெள்ளம்பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
20ஆம் நுற்றாண்டுகளின் முற்பகுதியில் இத்தாலியின் ஆதிக்கத்தில் இருந்தபோது டெர்னா நகரத்தின் பெரும்பகுதி இத்தாலியால் கட்டமைக்கப்பட்டது. பிற்காலங்களில் தீவிரவாத குழுக்களின் பிடியில் டெர்னா நகரம் சிக்கியிருக்கிறது. தொடர் உள்நாட்டு குழப்பங்கள், மோசமான உட்கட்டமைப்புகளால் பேரழிவின் பிடியில் சிக்கி பாடுபட்டுக்கொண்டிருக்கிறது டெர்னா நகரம்.
லிபியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் காரணமாக இதுவரை 5500 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில், லிபிய பாலைவனத்தில் வெள்ளம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சென்டினல்-2 செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது.. செப்டம்பர் 2ம் தேதி பாலைவனப் பகுதியில் புகைப்படத்தையும், செப்டம்பர் 12ஆம் தேதி வெள்ளம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.