மொராக்கோ, லிபியா file image
உலகம்

லிபியா வெள்ளம்-மொராக்கோ நிலநடுக்கம்.. தற்போதைய பாதிப்புகள் நிலவரம்.. பாதிப்புகளைத் தடுப்பது எப்படி?

உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்களால் பல்லாயிரம் மக்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் பேரிடர் பாதிப்புகளைத் தடுப்பது குறிப்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சொல்வது குறித்து பார்ப்போம்.

Prakash J

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியா

கடற்கரையோர நகரமான டெர்னாவில், டேனியல் புயல் காரணமாக பல கிழக்கத்திய நகரங்கள் பெரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. அதில் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருப்பது டெர்னா நகரம். நகரத்திற்கு வெளியே இருந்த இரண்டு அணைகள் மழைவெள்ளத்தில் இடிந்து விழுந்ததில், டெர்னா மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளம் புகுந்தது. பெரும் வெடி சத்தத்துடன் பீறிட்ட வெள்ளம், எதிர்ப்பட்ட அனைத்தையும் அடித்துச் சென்றது.

சுமார் 7 மீட்டர் உயரம் வரை அடித்துவந்த வெள்ளத்தின் பாதையில் இருந்த அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டன. இந்தப் பேரிடர் விபத்தில் இதுவரை, 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் எனவும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பலர் குடும்பம் குடும்பமாக உயிரிழந்துள்ளதால் தகவல் தெரிவிக்கக்கூட யாரும் இல்லாத நிலை உள்ளது.

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அட்லஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள மாரோச் என்ற இடத்தில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து நகரமே கட்டடக் குவியலாக காட்சியளிக்கிறது. இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2900ஐ தாண்டியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற பாதிப்புகளைத் தடுப்பது எப்படி?

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், “லிபியாவில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இறந்து போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதுவரை அதிகாரப்பூர்வமாக 10 ஆயிரம் பேர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக, இது ஒரு பருவகால நிலை பேரிடர்தான். இது, நமக்கு ஓர் இறுதி எச்சரிக்கை போன்றது. பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே எடுக்கும்போது இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்க முடியும். அதுபோல் மொரோக்காவை எடுத்துக்கொண்டால், நிலநடுக்கம் வருவதால் மக்கள் சாவதில்லை.

சுந்தர்ராஜன்

ஆனால், கட்டடங்கள்தான் மக்களைக் கொல்லும். கட்டடம் மற்றும் நகர வடிவமைப்புகளை இதேபோன்று பாதிப்பு வராத வகையில் மாற்றியமைக்க வேண்டும். இதுபோல் இந்தியாவிலும் நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பாதிப்புகள் நடைபெறும். அப்போது, நகரங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் தகவமைப்புகளை மாற்ற வேண்டும். அவற்றின் பாதிப்புகளைத் தடுக்க முடியாது. ஆனால், அவற்றைக் குறைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.