உலகம்

லிபியா: கடாபியின் மகன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை

லிபியா: கடாபியின் மகன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை

Veeramani

முன்னாள் லிபிய சர்வாதிகாரி மும்மர் கடாபியின் மகன் அல்-சாதி கடாபி திரிபோலியில் உள்ள அல்-ஹதாபா சிறையில் இருந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் கடாபியின் மகன்களில் ஒருவரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கடாபியின் மகன் அல்-சாதி கடாபி, நைஜரில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் திரிபோலியில் உள்ள அல்-ஹதாபா சிறையில் அடைக்கப்பட்டார். 2011இல் ஏற்பட்ட லிபிய கலகத்திற்கு முந்தைய குற்றங்களுக்காக அவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடாபிக்கு எட்டு குழந்தைகள் இருந்தன, அதில் ஒரு மகன் தந்தை கடாபி கொல்லப்பட்ட அதே நேரத்தில் கொல்லப்பட்டார், மேலும் இருவர் லிபிய கலகத்தின்போது கொல்லப்பட்டனர். மற்றொருவர் 2017 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு லிபியாவில் வசிக்கிறார், மற்றொருவர் லெபனானில் சிறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது, மீதமுள்ளவர்கள் அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றனர். 2012 இல் ஓமனில் கடாபியின் இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் கடாபியின் மனைவிக்கு தஞ்சம் அளிக்கப்பட்டது.

லிபியாவில் தற்போதும் குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது, திரிபோலியில் ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒப்பந்த நிர்வாகம் (GNA) மற்றும் கிழக்கில் இராணுவ தளபதி கலீஃபா ஹப்தார் தலைமையிலான நிர்வாகத்துக்கும் இடையே குழப்பமான சூழல் உள்ளது.