உலகம்

ஒரேயொரு கடிதான்.. மூச்சு பேச்சில்லாமலேயே.. உலகின் கொடிய விஷப்பாம்பு எது தெரியுமா?

ஒரேயொரு கடிதான்.. மூச்சு பேச்சில்லாமலேயே.. உலகின் கொடிய விஷப்பாம்பு எது தெரியுமா?

JananiGovindhan

மனிதர்களை பொறுத்தவரை பூமியில் இருக்கக் கூடிய மிகவும் அச்சுறுத்தக் கூடிய உயிரினங்களில் முதன்மையானவையாக இருப்பது பாம்புகள்தான். பாம்பு என வாயில் கூறினால் கூட பதறியடித்து ஓடுவோரே அதிகமாக இருப்பார்கள். கை கால்கள் இல்லாவிட்டாலும் மிகப்பெரிய விலங்குகளை விட கொடிய உயிரினமாகவே பாம்புகள் பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 600 வகையான பாம்பினங்களில் சுமார் 200 வகையான பாம்புகள் மனித இனத்துக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. அவற்றில் Inland Taipan என்ற வகை பாம்பு மிகவும் விஷத்தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. Oxyuranus microlepidotus என அறிவியல் பூர்வமாக அழைக்கப்படும் இந்த Inland Taipan கடுமையான பாம்பு என்றே பெரும்பாலும் கூறப்படுகிறது.

இந்த பாம்பின் விஷத்தில் டைபோக்சின் (taipoxin), மைக்கோடாக்சின்கள் (mycotoxins), நியூரோடாக்சின்கள் (neurotoxins), புரோகோ ஆகுலண்ட்ஸ் (procoagulants) ஆகியவை கொண்ட கலவை இருக்கிறதாம். இந்த விஷம் மனித உடலில் பாய்ந்தால் ரத்த நாளங்கள் மற்றும் தசை திசுக்களில் ரத்தக்கசிவை ஏற்படுத்தி, சுவாசத்தை தடுக்கச் செய்யுமாம்.

லீத்தல் டோஸ் LD50ன் (lethal dose) அளவு நச்சுத்தன்மையின் படி, இந்த Inland Taipan பாம்பில் ஒரு கிலோவுக்கு 0.025 மில்லி கிராம் அளவில் உள்ளதாம். அதாவது இந்த வகை பாம்பு ஒரு கடி கடித்தால் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் எலிகளை கொல்லும் திறன் கொண்டதாம். மனிதனை இந்த பாம்பு கடித்தால் அந்த நபர் ஒரு மணிநேரத்திலேயே மரணத்தை எட்டி விடுவார்.

இந்த Inland Taipan ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் மேற்கு மற்றும் தென்மேற்கிலும், நியூ சவுத் வேல்ஸின் தொலைதூர மேற்கு வழியாக தெற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு மூலையிலும், வடக்கு பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியிலும் பரவியுள்ளது. இந்த வகை பாம்பு நீண்ட முடிகளை கொண்ட பாலூட்டிகள் அல்லது பிளேக் எலிகளையே அதிகமாக உண்ணும்.

Inland Taipan உலகின் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பாக அறியப்பட்டாலும், அது தொலைதூர இடங்களிலேயே வாழ்வதால் மனிதர்களுடன் அவ்வளவாக தொடர்பில் இருப்பதில்லை. ஆகையால் இன்று வரை, இந்த வகை பாம்பின் கடியால் ஒரு மனிதனும் உயிரிழவில்லை என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் Inland Taipan பாம்பால் ஒருவர் கடிபட்டால், அந்த இடத்தை வெட்டவோ அல்லது கழுவவோ வேண்டாம். பிரஷர் பேண்டேஜ் மூலம் கடிபட்ட இடத்தை மூடிய பின்னர், கடித்த மூட்டு முனைகளில் தொடங்கி கடித்த இடம் வரை மீண்டும் கட்டவும். இது நிணநீர் மண்டலத்தின் வழியாக பாம்பு விஷம் பரவாமல் தடுக்க உதவும். இதனையடுத்து பாதிக்கப்பட்டவரை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யவும். பாதிக்கப்பட்ட மூட்டு ஒரு பிளவுடன் அசையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் எச்சரிக்கையோடு அறிவுறுத்தப்பட்டுள்ளது.