உலகம்

’என்னால் ஒரு கண்ணை சிமிட்ட கூட முடியல’ - முகப்பக்கவாதம் குறித்து ஜஸ்டின் பைபர் உருக்கம்!

’என்னால் ஒரு கண்ணை சிமிட்ட கூட முடியல’ - முகப்பக்கவாதம் குறித்து ஜஸ்டின் பைபர் உருக்கம்!

நிவேதா ஜெகராஜா

கனடாவை சேர்ந்த பாடகர் ஜஸ்டின் பைபருக்கு, முகப்பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தனது இன்ஸ்டாகிராம் வழியாக அவர் உறுதிசெய்துள்ளார்.

கனடாவை சேர்ந்த 28 வயதாகும் புகழ்பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பைபர். இவர் நேற்றைய தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு ராம்சாய் ஹண்ட் சின்ட்ரோம் என்ற ஒருவகை குறைபாடு உறுதிசெய்யப்பட்டிருப்பாகவும் அதனால் தனக்கு முகப்பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தனது `ஜஸ்டிஸ் வார்ல்ட் டூர்’ என்ற இசை நிகழ்ச்சியை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்த `ராம்சாய் ஹண்ட் சின்ட்ரோம்' என்பது, காதுகளுக்கு அருகிலுள்ள முக நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி நரம்பு பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு முகப்பக்கவாதமும், காது கேளாமையும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். ஏற்கெனவே இருமுறை கொரோனாவால் ஜஸ்டின் பைபரின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கே உடல் நிலை சரியில்லாமல் போனதால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தனக்கு இந்த பாதிப்பு இருப்பதை வீடியோ வழியாக கூறியுள்ள ஜஸ்டின் பைபர், “நீங்கள் நான் பேசுகையில் காணலாம். என்னால் என் ஒரு பக்க கண்களை அசைக்க முடியவில்லை. அதேபோல ஒருபக்கம் சிரிக்க முடியவில்லை. மூக்கும் கூட அந்தப் பக்கம் நகரவில்லை” என விவரித்திருக்கிறார். மேலும், “ஆக, என்னுடைய ஒரு பக்க முகம் முழுமையாக செயலிழந்துவிட்டது. தற்போதைக்கு என்னால் எந்த இசை நிகழ்ச்சியும் செய்ய முடியவில்லை. என்னுடைய இசை நிகழ்ச்சி ரத்தானதால் வேதனையில் இருப்பவர்கள், இதை புரிந்துக்கொள்ள வேண்டும். நான் நிகழ்ச்சியை நடத்த உடலளவில் கொஞ்சம் கூட தயாராக இல்லை.

அதை நீங்கள் இந்த வீடியோவை வைத்தே தெரிந்துக்கொள்ளலாம். என்னுடைய இந்தப் பிரச்னை, சற்று தீவிரமாக உள்ளது. தற்போதைக்கு முகத்துக்கான உடற்பயிற்சிகள் செய்துவருகின்றேன். நன்கு ஓய்வெடுக்கிறேன். நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவேன்! 100% மீண்டுவந்து, நான் பிறந்தது எதற்காகவோ அதை செய்வேன் (பாடுவதை குறிப்பிட்டு சொல்லியுள்ளார்)” என்று பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் ஜஸ்டினின் உடல்நிலை மீண்டும் பழைய நிலைக்கு வர, அவருக்கு சமூக வலைதளங்களில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.